எம்.ஜி.ஆர். 1972ல் கட்சி தொடங்கி எட்டு மாதங்களுக்குள் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் வந்தது.
அவருக்கு அது மிக முக்கியமான தேர்தல். கருணாநிதி தலைமையில் சர்வ வல்லமையுடன் இருந்த தி.மு.கவை எதிர் கொண்டு, ’அண்ணாவின் தொண்டர்கள் தன் பக்கமே இருக்கிறார்கள்’என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் அவருக்கு இருந்தது. மாயத்தேவரை கட்சியின் வேட்பாளராக நிறுத்தியாகி விட்டது. அன்று எம்.ஜி.ஆருக்கு தேர்தல் பணியில் உற்ற தோழர்களாக இருந்து உதவியவர்கள் இடதுசாரிகள்தான். புதிய கட்சியாதலால் எம்.ஜி.ஆர் எந்தச் சின்னத்தை தேர்ந்தெடுப்பார் என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருந்து. தேர்தல் கமிஷனிடம் கைவசம் இருந்த சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்களில் எம்.ஜி.ஆர் தேர்ந்தெடுத்தது இரட்டை இலையைத்தான். பிற்காலகட்டங்களில், குறிப்பாக எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு, ‘அந்த சின்னத்தைத் தேர்ந்தெடுக்க தான் தான் காரணம்’ என்று பலர் சொல்லிக் கொண்டாலும், அந்த சின்னத்தை தேர்ந்தெடுத்தவர் எம்.ஜி.ஆர் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இலைகள் என்றாலே பசுமை; வரைவதற்கு சுலபமான சின்னம்; மக்கள் மனதில் உடனடியாக பதியும்; ஆகிய காரணிகளே எம்.ஜி.ஆர் இரட்டை இலையை தேர்ந்தெடுக்க காரணம். இதை அவரே ஆரம்ப காலங்களில் கட்சியில் மூத்தவர்களிடம் சொல்லியிருக்கறார். ஆனால் எம்.ஜி.ஆர், திண்டுக்கல் தேர்தல் பிரச்சாரத்தில் முதல் இரண்டு மூன்று கூட்டங்களில் மக்களிடம் ’எந்த சின்னத்தில் ஒட்டு போடுவீர்கள்?’ என்று கேட்ட போது ‘உதய சூரியன்’ என்று குரல்கள் வந்தன. ஆனால் வெகு விரைவில் எம்.ஜிஆர் எதிர்பார்த்தது போல் மக்கள் மனதில் அழுத்தமாக பதிந்து விட்டது இரட்டை இலை. பெண்கள் வீட்டு வாசலில் இரட்டை இலைக் கோலம் போட்டு அவரை வரவேற்றார்கள். அது மட்டுமா? கூட்டங்களுக்கு வரும்போது தலையில் இரட்டை இலையுடன் கூடிய மலரை சூடிக் கொண்டு வந்தார்கள். இரட்டை இலை கிளிப்புகள் பெண்களிடம் அமோக வரவேற்பை பெற்றன. கட்சித் தொண்டர்கள் மிகச் சுலபமாக சுவற்றில் சின்னத்தை வரைந்தார்கள் திண்டுக்கல் இடைத்தேர்தலில் பிரம்மாண்ட வெற்றி பெற்றார் எம்.ஜி.ஆர். இந்த வெற்றி 1977 சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் தொடர, ஆட்சியைப் பிடித்தார் எம்.ஜி.ஆர். இரட்டை இலை சின்னமும் அவரோடு ‘ஜெல்’ லாகி விட்டது. உள்ளாட்சித் தேர்தல்களில் ஏற்பட்ட சிறிய பின்னடைவைத் தவிர எம்.ஜி.ஆர்.மறையும் வரை இரட்டை இலைக்கு பெரிய தோல்வி எதுவும் இல்லை. அது ஒரு வெற்றிச் சின்னமாகவே உருவகப்படுத்தப்பட்டது. அந்த சின்னத்திற்கு பின்னால் எம்ஜி.ஆர் என்ற மாபெரும் செல்வாக்குள்ள ஆளுமை இருந்ததும் வெற்றிக்கான காரணம் என்பது வெளிப்படை.
இந்திய தேர்தல் முறை கடந்த 65 வருடங்களில் பல சீர்திருத்தங்களைக் கண்டிருந்தாலும், சின்னங்களைப் பற்றிய பார்வையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கட்சி சார்புடைய வேட்பாளரோ அல்லது சுயேச்சை வேட்பாளரோ வாக்களிக்கும் இயந்திரத்தில் ஒரு சின்னத்துடன் தான் தொடர்பு படுத்தப் படுகிறார். சின்னத்தை முன்னிருத்தியோ அல்லது பிரதானப்படுத்தியோ தான் பிரச்சாரமே அமைகிறது. இந்த நிலை மாறுவதற்கான வாய்ப்பு எதுவும் இல்லை என்றே சொல்லலாம். இதற்கு இரண்டு காரணங்கள்: படம் (திடிண்தச்டூ) என்பது சுலபமாகவும் அழுத்தமாகவும் மனதில் பதியும்; அடுத்து கல்வியறிவு இல்லாத கோடிக்கணக்கான கிராமப்புற வாக்காளர்களுக்கும் கட்சிகளுக்குமான இடைவெளியை தேர்தல் அரசியலில் ‘கனெக்ட்’ செய்வது சின்னங்களே. எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு அதிமுக. இரண்டாக பிளந்து, இரட்டை இலை முடக்கப்பட்ட நிலையில், 1989 சட்டமன்ற பொதுத்தேர்தலில், ஜானகி தரப்பு இரட்டைபுறா சின்னத்திலும் ஜெயலலிதா தரப்பு சேவல் சின்னத்திலும் போட்டியிட்டன. தேர்தல் நாளன்று, கடலுர், விழுப்பரம் பகுதிகளில் பயணம் செய்தேன். நிறைய இடங்களில் வாக்கை போட்டுவிட்டு வெளியே வந்த பலர் ‘இரட்டை இலையைக் காணோமே’ என்று ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர். இதில் பெரும்பாலோர் பெண்கள். வயதான,கல்வியறிவு இல்லாத பெண்கள் வாக்கு சாவடி ஊழியர்களிடம் ‘இரட்டை இலை எங்கே’? என்று கேட்டு வாக்குவாதம் செய்தனர். சின்னத்தின் முக்கியத்துவம் அப்போது உணரப்பட்டது. அதிமுகவின் இரண்டு குழுக்களில் எந்த ஒரு குழுவிற்காவது இரட்டை இலை கிடைத்திருந்தால் அந்த குழு கூடுதல் பலத்துடன் தேர்தலை சந்தித்திருக்கும். இரட்டை இலையை முடக்கி சுயேச்சை சின்னங்களுடன் இரண்டு குழுக்களையும் போட்டியிட வைத்ததன் மூலம் ஒரு சமதளப் போட்டியை ஏற்படுத்தியது தேர்தல் கமிஷன்.
1989ல் 27 சட்டமன்றத் தொகுதிகளில் வென்று ஜானகியை விட, தானே எம்ஜிஆரின் வாரிசு என்பதை நிரூபித்தார் ஜெயலலிதா. தோல்வியை ஒப்புக் கொண்ட ஜானகி, தொடர்ந்து ஜெயாவுடன் மோத விரும்பாமல் கட்சியின் எதிர்கால இருப்பை மனதில் கொண்டு ஒத்துழைக்க, கட்சி ஒன்றுபட்டு இரட்டை இலை திரும்பக் கிடைத்தது. இந்திய தேர்தல் வரலாற்றில் முடக்கப்பட்ட ஒரு சின்னம் மறுபடியும் ரிலீஸ் செய்யப்பட்டது அதுவே முதல் முறை.
அவசரம் காரணமாக ஒரு ஞாயிறு அன்று இந்த நடவடிக்கையை மேற்கொண்டது தேர்தல் ஆணையம். சின்னம் கிடைத்ததும் மதுரைக் கிழக்கிலும், மருங்காபுரியிலும் ஆளும் கட்சியாக இருந்த திமுகவை தோற்கடித்தார் ஜெயலலிதா. ஆனால் பிற்காலகட்டங்களில் இரட்டை இலைச் சின்னம் மட்டுமே வெற்றியை தராது என்பதை அவர் 1996, 2006 -ம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் உணர்ந்து கொண்டார். 1980, 1996, 2004 நாடாளுமன்றத் தேர்தலிலும் சின்னம் கை கொடுக்கவில்லை!
தற்போது சரித்திரம் மீண்டும் திரும்பியிருக்கிறது. அதிமுக குழுக்கள் மூன்றாக பிரிந்து தேர்தலைச் சந்திக்கின்றன. இரட்டை இலை எந்த குழுவிற்கும் இல்லாதது அந்த குழுக்களிடையே சமதள போட்டியை உருவாக்கியிருக்கிறது. 1989ல் ஜெயலலிதா போட்டியிட்ட சேவல் சின்னத்தை அதிமுக குழுக்கள் விரும்பியிருக்கக் கூடும். ஆனால் மிருகங்களையும் பறவைகளையும் சின்னங்கள் பட்டியலிலிருந்த எடுத்து விட்டது தேர்தல் ஆணையம். ‘இப்போது சந்திப்பது ‘சின்ன’ பிரச்னையல்ல’ என்பதை தேர்தலுக்கு பின் அதிமுக குழுக்கள் உணரும்.ஆர்கே நகரில் திமுக வெற்றி பெறுமேயானால் அதிமுக குழுக்கள் விரைவில் ஒன்றாகும். எம்ஜிஆர், ஜெயலலிதா தொண்டர்கள் திமுக பலமடைவதை விரும்பவே மாட்டார்கள். எதேனும் ஒரு அதிமுக குழு தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில், தோற்ற குழுவினர் ஜெயித்த குழுவோடு ஐக்கியமாகி விடுவார்கள். மேலும் சரித்திரம் எத்தனை முறை தான் பாடம் கற்றுக் கொடுக்கும்?
ஏப்ரல், 2017.